Arunprabhus's Blog

மே 29, 2010

என் செய்வேனோ ?

Filed under: ஈழம் — arunprabhus @ 8:42 பிப
பகத்சிங் நேதாஜி சேகுவாரா பிரபாகரன்

it takes a loud voice to make the deaf hear

ஒரு முழு  ஆண்டு கடந்துவிட்டது.  ஆனாலும் அந்த பாரம் மட்டும் என் நெஞ்சை விட்டு இறங்க மறுக்கிறது.    காதுக்குள் அந்த ஈழ தமிழர்கள் அலறிய அலறல்  கேட்டுக்கொண்டே இருக்கிறது.

உறையாத சிவந்த இரத்தம் படர்ந்த மண்ணும்  செல் அடித்த சுவர்களும் சூழ்ந்த ஒரு மருத்துவமனை கட்டிடமும்,  உயிருடனும் உயிர்இல்லாமலும் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் கீழே பதுங்கியிருக்கும் ஓடாத ஒரு டிராக்டர் வண்டியும் அசைபடமாய் கண்களில் தொடர்ந்து ஓடுகிறது. அதன் பிண்ணணியாக செல்லும் ஆர்ட்டலரியும் வெடித்துத்தெரிக்கும் சத்தங்கள் அடிமண்டையில் ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது.

இதனிடையே தினமும்  தலைவரின் ஏதோ ஒரு உருவம் மனதில் வந்து போகிறது.  புதிதுபுதிதாக அவரைப் பற்றிய ஏதோ ஒரு சிந்தனை, வருத்தம் தினமும் தோன்றுகிறது.  வேதனையும் வெறுப்பும் மனதில் பாரமாக கனக்கிறது.

கடைசிநாட்களில் அவர் என்ன நினைத்திருப்பார்? போராளிகளிடமும் தளபதிகளிடமும் என் பேசியிருப்பார் ?  மற்ற அதிபர்களின் மகன்களும் மகள்களும் மந்திரிகளாக வீற்றிருக்க, காலமெல்லாம் மக்களுக்காக ஓடி ஓடி போராடிய தேசியதலைவனின் பிள்ளைகளாக துப்பாக்கியுடன் சார்லஸ்யையும், வயிற்றில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு துவாரகாவையும் வழியனுப்பி வைக்க அவனால் எப்படி முடிந்தது.

இவ்வளவும் நடந்த பின்னும் ஒரு சுத்த போராளியாக, தான் நேசித்த தமிழீழ நாட்டின் அடையாள அட்டையும், இயக்கத்தின் சீருடையும் அணிந்து  துப்பாக்கி ஏந்தி கடைசி தோட்டா இருக்கும் வரை எதிரியை பந்தாடிவிட்டு  மறைந்தானா  ?

இந்த கேள்விகளும் காட்சிகளும் நெருப்பாக என் நெஞ்சை எரிக்கிறது.

புலிகளை பற்றி குறைசொல்லும் எவரும்   ‘நாட்டிற்காக நம்முடைய ஒரு உறுப்பையோ அல்லது ஒரு  விரலையோ அல்லது ஒரு வருட சம்பளத்தையோ  கொடுக்க நம் மனம் சம்மதிக்குமா ?’ என்று ஒரு முறை யோசித்து பார்த்தால் அவர்களின் தியாத்தின் அளவு புரியும்.

இன்று இந்தியாவும் சிங்கள தேசமும் இணைந்து மூட்டிய ஈழ போர் நெருப்பு ஆயிரம் ஆயிரம் பகத்சிங்குகளையும், நேதாஜிகளையும், சேகுவாராக்களையும் கருக்கிப்போட்டிருக்கிறது.  நெருப்பாய் உள்ளுக்குள் எரிந்த அந்த தியாச் சுடர்களின் உடல்களும் இன்று நெருப்பில் வெந்து போனது.

அந்த ஒவ்வொரு தியாகியின் முகமும் ஒவ்வொரு நாளும் மனதில் வந்து போகிறது.  ஒரு பெருமூச்சும் துளி கண்ணீரும் அவர்களின் தியாகத்திற்கு காணிக்கையாகிறது. ஈழ செய்திகளையும் கொடுமைகளையும் பற்றி செய்திகளை தவிர்தாலும் அந்த நினைப்பும் தவிப்பும் மனதை கொள்கிறது.

இவ்வளவையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோமே என்ற ஆற்றாமையும் கோபமும்  மன பாரத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

கோபத்தை வெளிக்காட்ட மே மாதம் கருப்பு சட்டை அணிவதும்,  புலிகள் படத்தை  திரைச்சீலையாக வைத்திருப்பதும், காங்கிரசுக்கு எதிராக வாக்களிப்பதும்,  சில பொதுக்கூட்டங்களில் தொண்டனாக கலந்து கொள்ளவும் தான் முடிகிறது.

புரட்சியாளர்களுக்கும், தியாகிகளுக்கும் என்றுமே கதி இது தானா ? என்ற கேள்வி மனதில் அலையடிக்கிறது. நெஞ்சின் பாரம் மட்டும் குறையாமல் கணக்கிறது.

அந்த பாரம் குறைய என் செய்வேனோ தெரியவில்லை..

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.